1,
பசுவை விற்றாயிற்று
சுரந்துகொண்டேயிருக்கிறது
கண்ணீர்.
2,
'நகலகம்' தொடங்கியபின்
நன்றாய் இருக்கிறார்
படைப்பாளி!
3,
உடம்பெல்லாம் கூசும்
கடனுக்கு
வாங்கிய சட்டை.
4,
உறவினர் வந்தார்
உயிரை விட்டது
கோழி.
5,
அனல் காற்று
தூரத்தில் அசையும்
பிம்பங்கள்.
6,
'மதில்மேல் பூனை'
இரண்டு பக்கமும்
நாய்கள்.
7,
நாயகன் நாயகி அணைக்கையில்
சுற்றிச் சுற்றி ஆடும்
துணை நடிகைகள்.
8,
மறக்க முடியவில்லை
முதல் ஓவியம்
சுவரில் கிறுக்கல்.
9,
புறப்பட்ட வார்த்தை
தனது முடிவில் தரிசித்தது
புள்ளியை.
10,
சுவர்
படபடக்கும் 'காலண்டர்"
"இன்று ஆண்டின் இறுதிநாள்."
11,
"பறக்காதே
சும்மா இரு"
'பேப்பர் வெய்ட்'.
12,
தலைக்கனம்
தரையில்...
பறங்கிக் கொடி.
13,
எரியும் பிணங்கள்
வெட்டியான் வீட்டில்
சமையல்.
14,
திரைப்படம் பார்த்தேன்
பாடல்களிலும்
சேறு.
15,
வறண்டாலும் நிழல்தரும்
கூரைமேல்
வைக்கோல்.
16,
ஆறித்தான் போயிருக்கிறது
ஆனாலும் விரும்பி உண்கிறேன்
தோசையில் மனைவி மனம்.
17,
கைவரப் பெறாதவர்கள்
கதறுகிறார்கள்
உயரத்தில் ஐக்கூ.
18,
ஓய்ந்தது மழை
பூக்களில் கால்கழுவும்
வண்டுகள்.
19,
இதைவிடக்
கொன்று தின்றுவிடலாம்
வேண்டாம் கோழிச்சண்டை.
20,
பள்ளிக்கூட அறை
குழந்தை கவனிக்கும்
சன்னலில் மேகம்.
21,
காற்றுக்குக் கண்ணி்ல்லை
இருந்தால் நுழையுமா
தீயவர் மூக்கில்?
22,
பணத்தைவிட மோசம்
தூங்கவிடாது
கவிதை.
23,
'யாதும் ஊரே
யாவரும் கேளிர்'
காற்றுக்கு.
24,
தொடர்ந்த நடை
நத்தையின் காலடியில்
மலை உச்சி!
Great Post. I like these poems.
ReplyDeleteThanks
Please remove word verification (captcha) in comment area..
Thanks
நல்லா இருக்கண்ணா
ReplyDelete