Wednesday, October 22, 2008

ஹைக்கூ (க)விதைகள் - 4

1,
புகையும் 'சிகரெட்டு'கள்
எத்தனை பார்த்திருக்கும்
சாம்பல் கிண்ணம்...

2,
வேறு வழியில்லை
விழுந்தேயாக வேண்டும்
நிழல்.

3,
கவலையில்லை
ஓட்டைகள் பற்றி...
கூட்டுக்குள் தேன்.

4,
சேற்றில் நடக்கும் கால்கள்
நாற்று நடும் கைகள்
மனசோ தூளியில்.

5,
கறுத்த மேகம்
பொழியாமலே போய்விட்டது
நடைபாதையில் குடும்பம்.

6,
சூடு பறக்கும்
ஏரி மண்வெளி
கடக்கும் சிறுவர்கள்.

7,
திருமண வாசல்
பட்டை உரித்த வாழை
சோர்வாய் அப்பா.

8,
உறுதியான பாறைகள்
கிழிக்க முடியாமல்
வழுக்கிவிழும் அருவி.

9,
அமைதியான குளம்
அடியில்
அலையெழுப்பிய கல்.

10,
வேடிக்கை
பார்க்கும் மனிதர்கள்
சங்கிலி பறிக்கும் திருடன்.

11,
எண்ணுகிறேன்
தினமும்
இளஞ்செடி இலைகள்.

12,
கொக்கு பறக்கும்
புறா பறக்கும்...
கலவரத்தில் பறக்கும் கல்.

13,
ஒப்பந்தம் கையெழுத்து
ஒவ்வோர் ஆயுதமாய் ஒப்படைப்பு
அமைதிக்கு ரணங்கள் அதிகம்.

14,
எது அழகு...
இலையா? பூவா?
வேரில் ஏறிய நீர்.

15,
சிரிக்கும் புத்தர் சிலை
உதட்டின்மேல்
புணரும் ஈக்கள்.

16,
பழகிவிடு
பயம் கொடுக்காது
நாய்.

18,
'புள்ளி'தான்
கூர்ந்து கவனித்தால்
எத்தனை பிசிறுகள்!

19,
தவிப்பு தாங்கவில்லை
அடுப்புக்குள் விறகாய்
பழைய நாற்காலி.

20,
இருட்டுக்கும் குரல் உண்டு
என்பதறிந்தோம்
விடியும் வரை சுவர்க்கோழி.

21,
எத்தனை சுகம்
கட்டியனைத்தபடி உறக்கம்
குழந்தையும் நாய்க்குட்டியும்.

22,
அழுத்தியழுத்தி எழுதினேன்
பள்ளங்களைப் படித்துக்கொள்ளலாம்
பேனாவில் இல்லை மை.

23,
அந்திம வயது மூதாட்டி
விசாரிக்க வரும் உறவுகள்
வங்கியில் 'வைப்பு நிதி'

24,
வெட்டும் கத்தி
நுனியில் இனிக்கும்
பிறந்தநாள் 'கேக்'.

25,
எந்தப் பாவி அழித்தான்?
கானோமே
நேற்று இருந்த செடி.

No comments:

Post a Comment