Tuesday, October 21, 2008

ஹைக்கூ (க)விதைகள் - 2

1,
என் வீட்டில் ஐந்துபேர்
நான், மனைவி, மகன், மகள்,
மற்றும் அணில்.

2,
கம்பளி இருந்தும்
சளியுடன் தும்மும்
செம்மறியாடு.

3,
பிறகு வா பட்டாம்பூச்சியே
கால் பட்டழிகிறதே
பூவிதழ்ப் பனி.

4,
வராதா மழை
கப்பல்களுடன் காத்திருக்கும்
குழந்தை.

5,
அம்மி மிதித்து
அந்தப்புறமாய் போகும்
இரண்டு எறும்புகள்.

6,
மண்ணில் ஓடும் எலிக்கு
வானிலிருந்து வருகிறது
மரணம்.

7,
யார் வராவிடினும்
தான் வரும்
சேரிக்குள் நிலா.

8,
எப்படித் தொட்டாலும்
உறுத்துவதில்லை... ஓ,
பூக்களுக்கில்லை எலும்பு!.

9,
நிழல் விழாமல் கவனிக்கிறேன்
தெரு விளக்கில்
படிக்கும் சிறுவன்.

10,
முதலில் புழுவைப் பிடி
பிறகு பிடிக்கலாம்
தூண்டிலில் மீன்.

11,
அசைபோடும் மாடு
வயிற்றுக்குள்
புல்வெளி.

12,
உறங்குவதில்லை காடு
பகலில் காக்கை
இரவல் ஆந்தை.

13,
கையேந்தும் கிழவி
காருக்குள்
கையில்லாத கனவான்.

14,
வெயிலில் நிற்கும்
நிழல் தரும்
மரம்.

15,
கூர்மையான பார்வை
"எப்போது காலியாகும்?
பேருந்தில் இருக்கை!"

16,
புதிய மழை
நிரம்பித் தளும்பும்
பழைய குளம்.

17,
உணவைத் தேடி
நீர் கிழித்துப் போகும்
படகு நிறைய பசி.

18,
அழுத்தமாய் நட
பதிய வேண்டுமே
சுவடுகள்!.

19,
எல்லாப் போட்டிகளிலும்
முதலில் வருவதில்லை
பந்தயக் குதிரை.

20,
சாம்பல் கிளறி
கவிதை தேடினேன்
எரிந்த காகிதங்கள்.

21,
பட்டுக் குஞ்சம் கட்டுவேன்
சுத்தம் செய்யுமே
துடைப்பம்.

22,
உதிரிப் பூக்கள்
சேர்த்துக் கட்டும்
பூக்காரி.

23,
அதிகத் திறப்பு
அசிங்கம் தான்
கொட்டாவி விடும் வாய்!.

24,
சருகாய் போயினும்
காப்பாற்றி வருகிறேன்
காதலியின் கூந்தல் மலர்.

25,
ஒரே மாதிரி இருந்தாலும்
அலுக்கவில்லை
குயிலின் குரல்.

No comments:

Post a Comment