1,
'சுகப் பிரசவம்
தாயும் சேயும் நலம்'
குருவிக்கூட்டில்.
2,
'எம்மதமும் சம்மதமே'
பிணம் உண்ணும்
மண்.
3,
நமது நட்பை
இறுக்கமாய் தைப்போம்
இதோ நல்ல நூல்கள்.
4,
சன்னல் கம்பிகள்
மரத்துப் போனது
அக்காவின் கன்னம்.
5,
நீண்ட பேச்சு
நின்றது
ரயில்.
6,
உதிர்ந்த பின்னும்
மிதித்தால் சத்தமிடும்
சருகு.
7,
ஓடும் தண்ணீர்
நிற்க்கும் கொக்கு
ஆடும் நாணல்.
8,
'வாருங்கள்
வானை அளப்போம்..'
பறக்கும் பறவைகள்.
9,
கூட்டிப் பெருக்கிப் பார்த்தால்
என்னமாய் கனக்கிறது
தூசு!.
10,
திடீர் சந்திப்பு
மனசெல்லாம்
முன்னால் இளமை!.
11,
புத்தகத்துள்
மயில் இறகு
கண்ணாய் அவள்.
12,
மேகம் தீட்டிய வரிகள்
திரையில்லாமல் தரையில்
ஓடும் நதியாய்...
13,
நீந்திச் செல்லும் வாத்துகள்
கால்களில் தட்டுப்படும்
குடிசையின் கூரைகள்.
14,
மலை ஏறினேன்
எனக்கு முன்னால் ஏறியிருந்தது
மேகம்.
15,
எவ்வளவு பெரிய நிர்வாணம்
வெட்கம் இல்லாதது
வான்!
16,
இருக்கிறது மாடி
காண முடியவில்லை
துணிகள் காயும் கொடி.
17,
அதிரும் வீணை
நரம்புகளின் மேல்
குதித்தோடும் எலி.
18,
சிலைத் திறப்பு விழா
எத்தனை ஆண்டுகள்
பொறுமையாய் இருந்த கல்!
19,
மேடைக்குத்தான் அழகு
குளித்தபின் துடைக்க உதவாது
பொன்னாடை.
20,
கட்டங்களுக்குள்
சுதந்திரமில்லை காற்றுக்கு
தாக்கும் மின்விசிறிகள்.
21,
அறுவடை முடிந்ததும்
முள்ளாய்க் குத்தும்
வயல்.
22,
வீட்டுக்குள் விருந்து
புறக்கடையில்
மொட்டையாய் வாழை.
23,
பேருந்துப் பயணம்
இனிக்கவில்லை
வராத சில்லரை.
24,
கூவிப் புறப்படும் ரயில்
கையசைக்கும் குழந்தை
நகரும் 'ப்ளாட் ஃபாரம்.'
25,
தவித்துத் துவள்கிறேன்
மறந்தே போயிற்று
கனவில் வந்த கவிதை.
No comments:
Post a Comment